100 நாள் வேலைத்திட்டப் பணியாளர்கள் கும்பகோணத்தில் கும்மியடி போராட்டம்!
Published : Nov 7, 2023, 10:56 AM IST
தஞ்சாவூர்:கும்பகோணம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு 100 நாள் வேலைத்திட்டப் பணியாளர்களுக்கு 3 மாதமாக ஊதியம் வழங்கப்படாததைக் கண்டித்து ஏராளமான பெண்கள் கும்மி அடித்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தீபாவளி பண்டிகைக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், நூறு நாள் வேலைத் திட்டத்தின் கீழ் பணியாற்றியவர்களுக்கு கடந்த 3 மாதமாக ஊதியம் வழங்காமல் அலைக்கழித்து வரும் மத்திய அரசைக் கண்டித்து கும்பகோணம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் சார்பாக நடைபெற்ற போராட்டத்தில் ஊதியம் வழங்காத மத்திய அரசைக் கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதனையடுத்து, ஏராளமான பெண்கள் ஒன்று கூடி, நிலுவையில் உள்ள ஊதியத்தை உடனடியாக வழங்கிடக் கோரியும், தடையின்றி நூறு நாள் வேலையினை வழங்கிட வலியுறுத்தியும், கும்மி அடித்து நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டு, தங்களது எதிர்ப்பினை பதிவு செய்தனர். தொழிலாளர்களின் போராட்டத்தையொட்டி, போலீசார் பாதுகாப்பு பணிகளுக்காகக் குவிக்கப்பட்டிருந்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.