"கோயிலில் அனுமதிக்காவிட்டால் இந்து மதத்திலிருந்து வெளியேறுவோம்" - ஆக.15 வரை கெடு விதித்த மேல்பாதி மக்கள்! - tn news
விழுப்புரம்:மேல்பாதி திரௌபதி அம்மன் கோயிலில், கடந்த ஏப்ரல் மாதம் 7 ஆம் தேதி நடைபெற்ற விழாவின் போது, ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்த மக்களை கோயிலுக்குள் நுழைய விடாமல் தடுத்ததாக பிரச்னை ஏற்பட்டது. இதையடுத்து, சட்ட ஒழுங்கு பிரச்னை ஏற்படாமல் தடுக்கும் வகையில், விழுப்புரம் வருவாய் கோட்டாட்சியர் உத்தரவின்படி, 145 சட்டப் பிரிவை பயன்படுத்தி கோயிலை பூட்டி, கடந்த ஜூன் மாதம் 7 ஆம் தேதி சீல் வைக்கப்பட்டது.
மேலும் கோயில் நிலம் தங்களுக்குத்தான் சொந்தம் என இரு சமூக மக்களும் பரஸ்பரம் சொந்தம் கொண்டாடி வரும் நிலையில், கடந்த 7-ஆம் தேதி ஒரு தரப்பைச் சேர்ந்த 5 பேரிடம் வருவாய் கோட்டாட்சியர் விசாரணை நடத்தினார். அடுத்தக் கட்டமாக, மற்றொரு தரப்பைச் சேர்ந்த 5 பேரிடம் இன்று வருவாய் கோட்டாட்சியர் பிரவீனா குமாரி விசாரணை நடத்தினார்.
இந்த விசாரணைக்குப் பின், இன்று விசாரணைக்கு ஆஜரான தரப்பைச் சேர்ந்த வழக்குரைஞர் தமிழ்மாறன் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், "திரெளபதி அம்மன் கோயிலில் வழிபாடு செய்ய நடவடிக்கை எடுக்கவில்லை எனில், வரும் ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றும் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும், அதைத் தொடர்ந்து ஆகஸ்ட் 15 ஆம் தேதி இந்து மதத்திலிருந்து வெளியேற உள்ளதாகவும்" தெரிவித்தார்.