மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலில் ஊஞ்சல் உற்சவம்: பக்தர்கள் கரகோஷத்துடன் வழிபாடு!
விழுப்புரம்: மேல்மலையனூர் அருள்மிகு அங்காளம்மன் கோயிலில் வைகாசி மாதம் அமாவாசை ஊஞ்சல் உற்சவம் வெகு சிறப்பாக நடைபெற்றது. இதை முன்னிட்டு அதிகாலையில் மூலவர் அங்காளம்மனுக்கு பால், தயிர், இளநீர், தேன் உள்ளிட்டப் பூஜைப் பொருள்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகமும், ஆராதனையும் நடைபெற்றது.
இதைத் தொடர்ந்து அங்காளம்மனுக்கு வெள்ளிக்கவசம் அணிவிக்கப்பட்டு மகா தீபாரதனையும் நடைபெற்றது. அதன் பின்னர் உற்சவர் அங்காளம்மனுக்குப் பலவித மலர்களைக் கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. மேளதாளம் முழங்க வடக்கு வாசல் வழியாக உற்சவர் அங்காளம்மன் சிறப்பு அலங்காரத்தில் ஊஞ்சல் மண்டபத்தில் எழுந்தருளினார்.
அப்போது ஊஞ்சல் மண்டபம் எதிரில் இருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் அங்காளம்மா... தாயே... அருள் புரிவாயே! என கரகோஷத்துடன் தீபம் ஏற்றி அம்மனை மனமுருக பக்தியுடன் வழிபட்டனர். மேலும் ஊஞ்சல் உற்சவத்தில் கலந்து கொள்ள வரும் பக்தர்களின் வசதிக்காகவும், பாதுகாப்பிற்காகவும் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன. செஞ்சி காவல் கண்காணிப்பாளர் கவினா தலைமையில் 300க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.