புலம்பெயர் தொழிலாளர்களிடம் குறைகளை கேட்டறிந்த மயிலாடுதுறை எஸ்.பி! - Grievances of North indians
மயிலாடுதுறை: மேற்கு வங்காளம், பீகார், உத்ரகாண்ட், ஒடிசா உள்ளிட்ட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்து புலம்பெயர் தொழிலாளர்கள் சுமார் 700 பேர் பல்வேறு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இவர்களில் சுமார் 200 பேர் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக நிரந்தர கட்டடம் கட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழ்நாட்டில் புலம்பெயர் தொழிலாளர்கள் துன்புறுத்தப்படுவதாக எழுந்த புரளியைத் தொடர்ந்து, அவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில் கடந்த 6 ஆம் தேதி கட்டுமானப் பணி நடைபெற்று வரும் புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கட்டடத்துக்கு நேரில் சென்ற மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என்.எஸ்.நிஷா மற்றும் அதிகாரிகள் புலம்பெயர் தொழிலாளர்களிடம் குறைகளைக் கேட்டறிந்தனர்.
பின்னர் பேசிய அவர், "சீர்காழியில் உள்ள இறால் தீவனம் தயாரிக்கும் (பிஸ்மி) தொழிற்சாலையில் சுமார் 75க்கு மேற்பட்ட வட மாநில தொழிலாளர்கள் தங்கி பணிபுரிந்து வருகின்றனர். கடந்த வாரம் வட மாநில தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடைபெறுவதாக சமூக வலைத்தளத்தில் வதந்தி பரவிய நிலையில், தமிழக அரசு வடமாநில தொழிலாளர் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்றார்.
மேலும் அங்கு பணியாற்றும் வட மாநில தொழிலாளர்களிடம், அவர்கள் பணி புரியும் இடத்தில் பாதுகாப்பு குறித்துக் கேட்டறிந்தனர். மேலும் சமூக வலைத்தளங்களில் பரவிய வதந்திகளை நம்ப வேண்டாம் எனவும் தங்களின் பாதுகாப்பு காவல்துறை மூலம் உறுதி செய்யப்படும். தாங்கள் குறை மற்றும் பிரச்சனைகள் எதுவாக இருப்பினும் எந்நேரமும் காவல்துறையைத் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம்" என்றார்.