ஒடிசா ரயில் விபத்துக்கு மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி - Mayiladuthurai news
மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் இருந்து சென்னை நோக்கி வந்த கோரமண்டல் விரைவு ரயில், சரக்கு ரயில் மற்றும் ஹவுரா அதிவிரைவு ரயில் ஆகிய மூன்று ரயில்கள் ஒடிசா மாநிலத்தின் பாலசோர் மாவட்டம் அருகே நேற்றைய முன்தினம் (ஜூன் 2) பயங்கர விபத்திற்கு உள்ளானது. இதில் 290க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், 900க்கும் மேற்பட்டோர் காயங்கள் உடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதனிடையே, தமிழ்நாட்டில் இருந்து அமைச்சர்கள் சிவசங்கர், உதயநிதி ஸ்டாலின் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் அடங்கிய குழு ஒடிசா விரைந்தது. இவர்களில் தமிழ்நாட்டைச் சேர்ந்த பலர் சொந்தமாக ஊர் திரும்பிய நிலையில், பலர் சிறப்பு ரயில் மூலம் சென்னைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். இந்த நிலையில், மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை பேருந்து நிலையம் வாயிலில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
அப்போது, ரயில் விபத்து ஏற்பட்ட புகைப்படங்கள் உள்ள பேனர் வைக்கப்பட்டு ஜெயின் சங்கம், மயிலாடுதுறை தமிழ்ச் சங்கம், மயிலாடுதுறை சென்ட்ரல் லயன் கிளப், கலாம் பவுண்டேஷன் மற்றும் அறம் செய் அறக்கட்டளை சார்பாக உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக மெழுகுவர்த்தி ஏற்றி மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்த நிகழ்வில் பொதுமக்கள் உள்பட பலரும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.