வெளிநாட்டவர்களின் பிரம்மிப்பூட்டும் மயூர நாட்டியாஞ்சலி! - mayiladuthurai district news
மயிலாடுதுறை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற மாயூரநாதர் கோயில் உள்ளது. இந்த கோயிலில் சப்த ஸ்வரங்கள் அறக்கட்டளை சார்பில், 17ஆம் ஆண்டாக நான்கு நாட்கள் நடைபெறும் மயூர நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி நேற்றைய முன்தினம் (பிப்.15) கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், 2ஆம் நாள் நிகழ்ச்சியாக நேற்று (பிப்.16) மயிலாடுதுறை, சிதம்பரம், சென்னை, பெங்களூரு மற்றும் வெளிநாட்டவர்கள் பங்கேற்ற பல்வேறு நாட்டிய நிகழ்வுகள் அரங்கேற்றப்பட்டன.
குறிப்பாக சிங்கப்பூர், அபுதாபி, நியூ ஜெர்சி மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளைச் சேர்ந்த 4 நாட்டிய கலைஞர்கள் நிகழ்த்திய சிவனின் ருத்ரதாண்டவம் மற்றும் சிவனும் பார்வதியும் இணைந்து உலகில் உயிர்களை படைக்கும் விதமான ராகேஷ்வரி தரானா நாட்டியம் மற்றும் சென்னை ஸ்ரீ சாய் ந்ருத்யாலயா குழுவினரின் வள்ளலார் அருட்பெருஞ்ஜோதி நாட்டிய நாடகம் ஆகியவை அரங்கேற்றப்பட்டது. இதனை திரளான பார்வையாளர்கள் கண்டு களித்தனர்.