தருமபுர ஆதீனத்தில் பட்டணப்பிரவேச விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது! - pattina pravesam ceremony of Dharmapuram Adheenam
மயிலாடுதுறை: தருமபுரத்தில் 16 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த தருமபுர ஆதீனம் மடம் அமைந்து உள்ளது. தருமபுரம் ஆதீனத்தில் 11 நாட்கள் நடைபெறும் வைகாசி பெருவிழாவில் விழாவின் முக்கிய நிகழ்வான திருக்கல்யாண வைபவம் ஜூன் 6 ஆம் தேதியும், திருத்தேர் உத்ஸவம் ஜூன் 8 ஆம் தேதியும், ஜூன் 9 ஆம் தேதி காலை காவிரியில் தீர்த்தவாரியும் நடைபெற உள்ளது.
வரும் 10 ஆம் தேதி தருமபுரம் ஆதீனம் 27வது குருமா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் சிவிகை பல்லக்கில் பட்டண பிரவேசம் மேற்கொண்டு பக்தர்களுக்கு ஆசி வழங்குவார். இந்தப் பெருவிழாவின் கொடியேற்றம் ஞானபுரீஸ்வரர் ஆலயத்தில் இன்று நடைபெற்றது.
கொடி மரத்திற்குச் சிறப்புப் பூஜைகள் செய்யப்பட்டு தருமபுரம் ஆதீன கர்த்தர் முன் நிலையில் திருவிழாவில் ரிஷபக் கொடி ஏற்றப்பட்டது. பாரம்பரியமாக நடந்து வரும் பட்டணப் பிரவேச விழாவைக் கடந்த ஆண்டு நடத்தத் தடை விதிக்கப்பட்டு பின்னர் விலக்கிக் கொள்ளப்பட்டதை அடுத்து இந்த விழா பெரும் முக்கியத்துவம் பெற்றுள்ளது.