பாயாசம் ஏன்டா இப்படியிருக்கு..? போர்க்களமாக மாறிய கல்யாண வீடு..! - வைரலாகும் வீடியோ - திருமண நிச்சயதார்த்த விழாவில்
மயிலாடுதுறை: பொதுவாக, திருமண வீடுகளில் சீர்வரிசையில் இது இல்லை, அது இல்லை என்றுதான் கூறி சண்டை போடுவதைப் பார்த்து இருப்போம். ஆனால், சீர்காழியில் தனியார் மண்டபத்தில் நடந்த திருமண விழாவில் பாயாசம் சரியில்லை எனக் கூறி ஒரு அலப்பறையே நடந்துள்ளது.
சீர்காழி தெற்கு ரத வீதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று (ஜூன் 5) நடைபெற்ற திருமண நிச்சயதார்த்த விழாவில் மணமகன் வீட்டார் - பெண் வீட்டார் இருவரும் மண்டபத்தில் வாசலில் ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இது தொடர்பாக, சீர்காழி போலீசார் தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு சென்று இருதரப்பையும் சமாதானம் செய்தனர். மேலும், இது குறித்து போலீசார் விசாரணை செய்ததில், நிச்சயதார்த்த விழாவிற்கு வந்தவர்கள் உணவு உட்கொண்ட போது சாப்பாட்டு பந்தியில் பாயாசம் பறிமாறியுள்ளனர். அப்போது 'பாயாசம் சுவையாக இல்லை' என அதிருப்தி அடைந்த பெண் வீட்டார், மாப்பிள்ளை வீட்டாரை தகாத வார்த்தையால் திட்டியதாக கூறப்படுகிறது.
இதனால், மாப்பிள்ளை வீட்டார் தரப்பில் ஆத்திரமடைந்து சாம்பாரை பெண் வீட்டார் மீது ஊற்றியதாக கூறப்படுகிறது. இதனால், இருதரப்பினருக்கும் கைகலப்பாகி மோதல் ஏற்பட்டுள்ளது. இதனால், திருமண நிச்சயதார்த்தத்திற்கு வந்தவர்கள் சாப்பாடு சாப்பிடும் போது மேசை, நாற்காலிகளை தள்ளிவிட்டு ரகலையில் ஈடுபட்டுள்ளனர். இவ்வாறு மண்டப வாசலிலல் இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் அடித்து கொண்ட வீடியோ சமூக வளைதலத்தில் வேகமாக பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இதுகுறித்து சீர்காழி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சமாதான செய்து இருதரப்பையும் அனுப்பி வைத்தனர்.
இதையும் படிங்க: மயிலாடுதுறையில் ரயில் பெட்டி வடிவில் பிரியாணி கடை திறப்பு.. அடேங்கப்பா..! இவ்வளவு வசதியா..?