ஈரோட்டில் கோயில் திருவிழாவில் கும்மி பாட்டு பாடியபடி நடனமாடிய பெண்கள்!
ஈரோடு: கொங்கு மண்டலத்தை பொறுத்தவரை கோடைக் காலங்களில் கிராமங்களில் உள்ள மாரியம்மன் கோயில்களில் கம்பம் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதாவது மாதம் மும்மாரி பெய்து விவசாயம் செழிக்க மாரியம்மனுக்கு விழா எடுத்து சிறப்பு பூஜைகள் செய்து வழிபாடு செய்வார்கள்.
அந்த வகையில், ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே சிக்கரசம்பாளையம் கிராமத்தில் உள்ள சஷால மாரியம்மன் கோயிலில் கம்பம் திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த விழாவையொட்டி நேற்று இரவு கோயில் வளாகத்தில் பெண்கள் மற்றும் சிறுமிகள் கும்மி பாட்டு பாடியபடி பாரம்பரிய கும்மி நடனத்தை ஆடி அசத்தினர்.
ஊர் பெரியவர்கள் கும்மி பாட்டு பாட அதை பின் தொடர்ந்து பெண்கள் மற்றும் சிறுமியர்கள் பாடலை பாடியபடி நடனமாடினர். அந்த கும்மி நடனத்தை கிராம மக்கள் அனைவரும் கண்டு ரசித்தனர்.
இன்றைய நவீன யுகத்தில் செல்போன், டிவி உள்ளிட்ட பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த போதிலும் கிராமங்களில் பழங்கால முறைப்படி பாரம்பரிய கும்மி நடனம் மற்றும் கும்மி பாட்டு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருவது கிராமத்தில் இன்னும் கலைகள் அழியாமல் உள்ளதை எடுத்துக்காட்டுகிறது.