தஞ்சையில் விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் செய்த இஸ்லாமியர்கள்!
Published : Jan 14, 2024, 7:08 PM IST
தஞ்சாவூர்: தஞ்சை அரண்மனை வளாகத்தில் காமராஜ் காய்கறி மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இந்த மார்க்கெட், சுமார் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. அதேநேரம், மார்கழி மாதம் தொடக்கம் முதலே கோயில்களில் சிறப்பு பூஜைகள் மற்றும் பஜனைகள் நடைபெற்று வருகின்றன.
அந்த வகையில், தஞ்சை காமராஜ் மார்க்கெட்டில் உள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் கோயிலில், மார்கழி மாதம் முழுவதும் சிறப்பு பூஜைகள் மற்றும் பஜனைகள் நடைபெற்றன. இந்த நிலையில், இன்றுடன் மார்கழி மாதம் நிறைவடைவதால், ஸ்ரீ செல்வ விநாயகர் கோயிலில் நிறைவு பூஜைகள் நடைபெற்றன. இந்த பூஜையில், இஸ்லாமியர்கள் சார்பில் விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனை காட்டப்பட்டது.
இதில் இஸ்லாமியர் உள்பட அனைத்து மதத்தினரும் கலந்து கொண்டனர். இந்த பூஜைகளைத் தொடர்ந்து, இஸ்லாமியர்கள் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. மேலும், இந்த காமராஜ் மார்க்கெட்டில் உள்ள நாகூர் ஆண்டவர் தர்காவில் கொடியேற்ற விழா மற்றும் சந்தனம் பூசும் விழாவை இந்துக்கள் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக கொண்டாடி வருவது குறிப்பிடத்தக்கது.