புதுச்சேரியில் மஞ்சு விரட்டு கோலாகலம்.. ஆர்வத்துடன் கண்டுகளித்த வெளிநாட்டினர்..!
Published : Jan 17, 2024, 10:34 PM IST
புதுச்சேரி:தமிழர்களின் பொங்கல் பண்டிகையின் மூன்றாம் நாளான இன்று (ஜனவரி 17) காணும் பொங்கல் கொண்டாடப்படுகிறது. காணும் பொங்கலையொட்டி புதுச்சேரி அருகே உள்ள குயிலாப்பாளையத்தில் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக மஞ்சு விரட்டு நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.
அதன்படி, இந்தாண்டும் குயிலாப்பாளையத்தில் உள்ள மந்தை வெளித்திடலில் விழா நடைபெற்றது. பின்னர், கொம்புகளில் வர்ணம் பூசி, பூ, பலூன்களை கட்டி அலங்கரித்த மாடுகளை மந்தைவெளித் திடலுக்குக் கிராம மக்கள் அழைத்து வந்தனர். இதையடுத்து மாடுகளுக்குச் சிறப்புப் பூஜை செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து மஞ்சுவிரட்டு நடைபெற்றது. அப்போது ஏராளமான சிறுவர்களும், இளைஞர்களும் மாடுகளை உற்சாகத்துடன் விரட்டிச் சென்றனர். கிராமங்களில் இருந்து ஏராளமானோரும், வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளும் குயிலாப்பாளையம் கிராமத்துக்கு வந்திருந்தனர். அவர்கள் தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி, புடவைகளை அணிந்து வந்து மஞ்சு விரட்டு நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். மஞ்சுவிரட்டில் கலந்து கொண்ட மாடுகளின் கொம்புகள் முன்பு அஜித், விஜய், விஜயகாந்த், வீரப்பன் ஆகியோர் படங்களை வைத்து பலூன்களை கொண்டு அலங்கரித்து அழைத்து வந்தனர்.