50 அடி நீள குச்சிகளூடன் தினசரி 92 கி.மீ ஆபத்து பயணம்.. பதைபதைக்கும் வீடியோ! - man rides bike in one hand
Published : Nov 5, 2023, 11:09 PM IST
திண்டுக்கல்:குஜிலியம்பாறையில் இருந்து வேடசந்தூர் செல்லும் சாலையில் புளியம்பட்டி அருகே இளைஞர் ஒருவர், 50 அடி நீளமுள்ள 4 குச்சிகளைத் தோளில் சுமந்தவாறு ஒரு கையில் குச்சிகளைப் பிடித்துக் கொண்டு, மறு கையில் மோட்டார் சைக்கிள் ஓட்டிக்கொண்டே சென்று கொண்டிருந்தார்.
சாதனை ஏதேனும் செய்வதற்காக இவ்வாறு செய்கிறாரா என்று அவரிடம் விசாரித்த போது, அவர் பெயர் அழகேசன் என்றும், தேங்காய் பறிக்கும் தொழிலாளி என்றும் தெரிவித்தார். மேலும் அவர் கரூரிலிருந்து 92 கிலோமீட்டர் தூரமுள்ள திண்டுக்கல் மாவட்டம் ஆலம்பட்டிக்குத் தேங்காய் பறிக்கும் குச்சிகளை மோட்டார் சைக்கிளில் கொண்டு செல்வதாகத் தெரிவித்தார்.
இதையடுத்து சிறு வயது முதலே மோட்டார் சைக்கிளில் குச்சிகளை எடுத்து செல்வதால் அவருக்கு ஒரு கையில் ஓட்டிச் செல்ல பழகிவிட்டதாக தெரிவித்தார். சாலையில் ஏராளமான வாகனங்கள் சென்றபோதும், போக்குவரத்து மிகுந்த பகுதியிலும், அவர் அசால்டாக ஒரு கையில் மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்றது அந்த வழியை சென்றவர்களை வியப்பில் ஆழ்த்தியது.
மேலும் பலர் சாதனைகள் செய்ய வேண்டும் என்பதற்காகப் பல முயற்சிகளில் ஈடுபட்டு வரும் நிலையில், திண்டுக்கல்லில் அழகேசனின் இந்த ஆபத்து பயணம் தொழிலுக்காக இருந்தாலும் அதனை கட்டுப்படுத்த வேண்டும் என இணைய வாசிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.