வரும் 2024 மக்களவைத் தேர்தலிலும் திமுக - காங்கிரஸ் கூட்டணி தொடரும் - மல்லிகார்ஜூன கார்கே - MKS 70
சென்னைநந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 70வது பிறந்தநாள் விழா நடைபெற்றது. இதில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் ஃபரூக் அப்துல்லா, உத்தரப்பிரதேச முன்னாள் முதலமைச்சர் அகிலேஷ் யாதவ் மற்றும் திமுக அமைச்சர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதில் பேசிய மல்லிகார்ஜூன கார்கே, ''நாட்டின் முதல் பிரதமரான நேரு, நாட்டில் அறிவியல் மனப்பான்மையை ஏற்படுத்த விரும்பியதை மு.க.ஸ்டாலின் செய்து வருகிறார். எங்களது ஒற்றுமைப் பயணத்தை ஸ்டாலின், தமிழ்நாட்டின் கன்னியாகுமரியில் இருந்து தொடங்கி வைத்தார். எதிர்க்கட்சிகள் ஆட்சியில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் ஆளுநர்கள் மூலம் பாஜக ஆட்சி செய்து வருகிறது. தற்போது நாடு உள்ள இக்கட்டான சூழ்நிலையில், வரும் 2024 மக்களவைத் தேர்தலிலும் திமுக - காங்கிரஸ் கூட்டணி தொடரும்'' என்றார்.