மகாளய அமாவாசை; தஞ்சை திருவையாற்றில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து பொதுமக்கள் வழிபாடு! - Thanjavur Mahalaya Amavasya
Published : Oct 14, 2023, 10:56 AM IST
தஞ்சாவூர்:மகாளய அமாவாசையை முன்னிட்டு இன்று (அக்.14) திருவையாறு காவிரி கரை புஷ்ப மண்டப படித்துறையில் பொதுமக்கள் புனித நீராடி, தங்களது முன்னோர்களுக்கு திதி கொடுத்து வழிபாடு செய்தனர். மகாளய அமாவாசையை முன்னிட்டு, தமிழகத்தில் நதிக்கரைகளில் கோயில்களில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து மக்கள் வழிபாடு நடத்துவது வழக்கம்.
அந்த வகையில், மாதம் தோறும் வரும் அமாவாசையன்று மறைந்த மூதாதையர்களுக்கு திதி கொடுக்க தவறியவர்கள், புரட்டாசி மாதம் மகாளய அமாவாசை அன்று தர்ப்பணம் செய்தால் புண்ணியம் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. அதன்படி, புரட்டாசி மாதம் மகாளய அமாவாசையை முன்னிட்டு தஞ்சை, திருவையாறு காவிரி கரை புஷ்ப மண்டப படித்துறையில் ஏராளமானவர்கள் புனித நீராடி, அரிசி, காய்கறி, கீரை உள்ளிட்ட பொருட்களை புரோகிதர்களுக்கு தானமாக வழங்கி, மறைந்த முன்னோர்களை நினைத்து, எள் தண்ணீரை காவிரி ஆற்றில் விட்டு, சூரிய பகவானுக்கு தீபம் காட்டி வழிபாடு செய்தனர்.
தஞ்சை மாவட்டம் மட்டுமின்றி பிற மாவட்டங்கள், அண்டை மாநிலங்களிலிருந்து ஏராளமானவர்கள் வந்து, காவிரி கரையில் புனித நீராடி மறைந்த தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்துச் சென்றனர். இதனையடுத்து, திருவையாறு காவிரி கரையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.