அருள்மிகு ஆரணி கற்பகநாதர் திருக்கோவிலில் மகா கும்பாபிஷேகம்!
திருவண்ணாமலை: ஆரணி அடுத்த சேவூர் EB நகர் இராட்டிணமங்கலம் சாலையில் புதியதாக எழுந்தருளி உள்ள அருள்தரும் முத்துமாரியம்மன், அருள்தரும் கற்பகாம்பிகை உடனாகிய அருள்மிகு கற்பகநாதர் திருக்கோவில் திருநெறி தீந்தமிழ்த் திருக்குட நன்னீராட்டு பெருவிழா இன்று காலை வெகு விமரிசையாக நடைபெற்றது.
முன்னதாக ஆலயம் அருகே யாகசாலை அமைத்து கங்கை, யமுனை, காவேரி நதிகளிலிருந்து புனித நீர் மற்றும் காசி , இராமேஸ்வரம் உள்ளிட்ட ஆலயங்களிலிருந்து புனித நீர் கொண்டுவரப்பட்டு யாகசாலையில் வைத்து கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், கோ பூஜை முதல் கால யாக பூஜை நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து, இரண்டாம் காலை யாக பூஜை, நவகிரக ஹோமம், லட்சுமி ஹோமம், பூர்ணாஹதி நடைபெற்று மூன்று மற்றும் நான்காம் கால பூஜை மேற்கொள்ளப்பட்டு விமான கோபுர தளத்திற்குக் கலச நீர் விமான புறப்பாடு நடந்தது.
ஆலயத்தில் மேல் கோபுரத்தில் அமைந்துள்ள கோபுர கலசத்தில் முத்துமாரி அம்மன் மற்றும் கற்பகநாதர் கோபுர கலசத்தில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்கக் கோபுர கலச புனித நீர் ஊற்றி ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய என்று விண்ணை முட்டும் அளவிற்கு "சிவாய நம சிவாய நம" கோஷம் எழுப்பி நன்னீராட்டு பெருவிழா நடைபெற்றது.
பின்னர் ரத்தினகிரி பாலமுருகன் அடிகளார் ஆலயத்தின் கருவறையில் அமைந்துள்ள கற்பகநாதர் சிவலிங்கத்திற்கு விசேஷ பூஜைகள் நடைபெற்றது. புனித நீர் தெளித்து பக்தர்கள் புனித நீராடிப் போதித்து வழிபட்டனர். மேலும், இன்றைய நாள் முழுவதும் ஆலயம் நிர்வாகம் சார்பில் சிறப்பு அன்னதானங்கள் வழங்கப்பட்டது.ஆரணி, ராணிப்பேட்டை, திருவண்ணாமலை சுற்றியுள்ள கிராமங்களிலிருந்தும், நகர்ப்புறங்களிலிருந்தும் சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் இந்த குடமுழுக்கு விழாவில் கலந்து கொண்டு புனித நீராடினர்.
இதையும் படிங்க:அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான வழக்கை வேகப்படுத்தும் திமுக..!; பின்னணி என்ன..?