Maha Shivratri: 3,000 தேங்காய்களை கொண்டு வடிவமைக்கப்பட்ட பிரம்மாண்ட சிவலிங்கம் - சேலம்
சேலம்: நாடு முழுவதும் மகா சிவராத்திரியை முன்னிட்டு அனைத்து சிவாலயங்களிலும் நேற்றிரவு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. அந்த வகையில் சேலம் மாநகரில் உள்ள பிரசித்தி பெற்ற சுகவனேஸ்வரர் ஆலயம் மற்றும் தாரமங்கலம் கைலாசநாதர் கோயில் உள்ளிட்ட பல்வேறு சிவாலயங்களில் சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றன.
இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர். குறிப்பாக சேலம் அம்மாபேட்டை பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் யுகாதி நண்பர்கள் குழு சார்பில் 3,000 தேங்காய்களை கொண்டு வடிவமைக்கப்பட்ட பிரம்மாண்ட சிவலிங்கத்திற்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.
ஒரே இரவில் அமைக்கப்பட்ட இந்த சிவலிங்கத்தை ஏராளமான பக்தர்கள் தரிசித்து வழிபாடு செய்தனர். இந்த பிரம்மாண்ட லிங்கம் வரும் புதன்கிழமை வரை பக்தர்களின் காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளதாகவும், அப்துல் கலாம் புக் ஆப் சாதனையை இதன் மூலம் செய்துள்ளதாகவும் சிவலிங்கத்தை அமைத்தவர்கள் தெரிவித்துள்ளனர்.