திருக்கடையூர் அபிராமி சமேத அமிர்தகடேஸ்வரர் கோயிலில் மகா ருத்ர யாகம்! - Mayiladuthurai news
மயிலாடுதுறை: தரங்கம்பாடி தாலுகா திருக்கடையூரில் தருமபுரம் ஆதீனத்திற்குச் சொந்தமான தேவாரப்பாடல் பெற்ற உலக புகழ்பெற்ற ஸ்ரீஅபிராமி சமேத அமிர்த கடேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. சிறப்பு வாய்ந்த இவ்வாலயத்தில் கடந்த 5ம் தேதி மகா கணபதி ஹோமம் செய்யப்பட்டு ருத்ர யாகத்தின் முதற்கால யாகசாலை பூஜை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து நேற்று (பிப்.7) தருமபுர ஆதீனம் 27வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிய ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் முன்னிலையில் நான்காம் கால யாகசாலை பூஜை நடைபெற்றது.
இதைத் தொடர்ந்து மகா ருத்ர பராயானம் நடைபெற்று, பின்னர் பூரணாகுதி செய்யப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது. அதைத் தொடர்ந்து கடம் புறப்பாடு செய்யப்பட்டு மங்கள வாத்தியங்கள் முழங்கக் கோயிலைச் சுற்றி வலம் வந்து அமிர்தேடேஸ்வரர் சுவாமி, அபிராமி அம்மனுக்குச் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது . இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.