Video - பொள்ளாச்சியை அடுத்த சரளபதியை சூறையாடும் மக்னா யானை; விவசாயிகள் வேதனை! - சின்னத்தம்பி கும்கி யானை
கோவை:ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட பகுதியில் தர்மபுரியில் இருந்து பிடிக்கப்பட்ட மக்னா யானை ஒன்று விடப்பட்டது. இந்த யானை கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக சரளபதி பகுதியில் முகாமிட்டு அங்கு உள்ள பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது.
மேலும் அவ்வப்போது மலை அடிவாரத்தில் உள்ள கிராமங்களில் தனியார் தென்னந்தோப்புகளுக்குள் புகுந்து விளைநிலங்களை சேதப்படுத்தி வருகிறது. மக்னா யானையைக் கட்டுப்படுத்த கடந்த சில தினங்களுக்கு முன்பு ஹர்ஷவர்தன், சின்னத்தம்பி, கபில்தேவ் என மூன்று கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டன.
சரளபதி அருகே நிறுத்தி வைக்கப்பட்டு வனத்துறையினர் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர் இருப்பினும் இரவு நேரங்களில் மக்னா யானை தொடர்ந்து விளை நிலங்களை சேதப்படுத்தி வருகிறது.
இந்நிலையில் நேற்று இரவு சரளபதியில் உள்ள தனியார் தோட்டத்திற்குள் புகுந்த மக்னா யானை அங்கிருந்த 50க்கும் மேற்பட்ட வாழை மரங்களையும், இருபதுக்கும் மேற்பட்ட தென்னை மரங்களையும் சேதப்படுத்தி உள்ளது.
ஒரு சில மரங்களை வேரோடு பிடுங்கி எறிந்துள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர். மேலும் கும்கி யானைகளை களத்தில் நிறுத்தியும் எந்த பலனும் இல்லை என இப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.