மதுரை கூடலழகர் பெருமாள் கோயில் தெப்பத் திருவிழா கோலாகலம் - masi magam festival in madurai kudalazhagar
மதுரை கூடலழகர் பெருமாள் கோயில் மாசி மகம் தெப்பத் திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து மகிழ்ந்தனர். மதுரை கூடலழகர் பெருமாள் கோயில் மாசிமகம் தெப்பதிருவிழா கோலாகலமாக நடைபெற்றது. சூழ்ந்திருந்த பக்தர்கள் வெள்ளத்தில் பெருமாள் எழுந்தருளி அருள்பாலித்தார்.
108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகவும், திருமங்கையாழ்வாரால் பாடல் பெற்ற தலப்பெருமை கொண்ட திருக்கோயிலாகவும் விளங்குகின்ற மதுரை கூடலழகர் திருக்கோயிலில் நடைபெறும் சிறப்பு பெற்ற விழாக்களில் ஒன்றான மாசி மகம் தெப்பத் திருவிழா. இந்த விழா கடந்த பிப்ரவரி 24ஆம் தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்கியது.
இதைத் தொடர்ந்து வியூகசுந்தர்ராஜ பெருமாள் தாயாருடன் தினமும் சிம்மம், அன்னம், அனுமார் வாகனம், ஷேச வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி கோயில் மாடவீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். மேலும் 11ஆம் நாளான நேற்று (மார்ச் 6) தங்க சிவிகையில் பெருமாள் புறப்பாடாகி இரவு உபயநச்சியாருடன் மதுரை டவுன் ஹால் ரோடு பகுதியில் உள்ள பெருமாள் தெப்பத்தில் பக்தர்கள் வெள்ளத்தில் எழுந்தருளினார். அப்போது பக்தர்கள் கோவிந்தா கோசத்துடன் பெருமாளை வணங்கி சென்றனர்.