'கல்வெட்டில் பெயர் இல்லை'... மதுரை துணை மேயர் போராட்டம்; நடந்தது என்ன? - திருப்பரங்குன்றம்
மதுரை: திருப்பரங்குன்றத்தில் மதுரை மாநகராட்சி மண்டலம் என பொதுமக்கள் குறைதீர்க்கும் சிறப்பு முகாம் மதுரை மேயர் மற்றும் துணை மேயர் தலைமையில் நேற்று(மே 9) நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மேயர் மற்றும் துணை மேயர் மக்களின் குறைகளைக் கேட்டு அறிந்தனர்.
இதனைத் தொடர்ந்து திருப்பரங்குன்றம் மண்டல அலுவலகத்தில் உள்ள பொறிக்கப்பட்டிருந்த கல்வெட்டில் மேயர் இந்திராணி பொன்வசந்தன் பெயர் மட்டும் இடம் பெற்றிருந்தது. இதனைக் கண்ட துணை மேயர் நாகராஜன் கல்வெட்டில் துணை மேயர் என்னும் பெயர் பொறிக்கப்படவில்லை, இது முற்றிலுமாகத் தவிர்க்கப்பட்டு வருகிறது. துணை மேயர் எனும் கல்வெட்டை திட்டமிட்டு பதிக்கவிடாமல் செய்கிறார்கள் என்றார்.
மேலும், கல்வெட்டில் மேயர் பெயர் மட்டும் பொறிக்கப்பட்டுள்ளதாகவும், தனது பெயர் வேண்டும் என்றே புறக்கணிக்கப்படுவதாகக் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர் பலரும் சமாதானம் செய்தும் தன்னுடைய பெயர் வேண்டுமென்றே புறக்கணிக்கப்படுவதாகவும், தொடர்ந்து அதிகாரிகள் இதே பணியை செய்து வருகிறார்கள் என குற்றம்சாட்டி வேறு கல்வெட்டு வைக்கும் வரை போராட்டத்தை கைவிட மாட்டேன் எனவும் கூறி துணை மேயர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.