அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: தேனி வீரர் முத்துக்கிருஷ்ணன் முன்னிலை!
Published : Jan 15, 2024, 10:53 AM IST
மதுரை: தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை நாடு முழுவதும் கோலகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழ் பாரம்பரியத்தைப் பொறுத்தவரை பொங்கல் தினத்தன்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் மதுரையில் முதல் நாள் ஜல்லிக்கட்டாக இன்று (ஜன.15) அவனியாபுரத்தில் துவங்கி நடைபெற்று வருகிறது.
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் தேர்ந்தெடுக்கப்பட்ட 1000 காளைகள் மற்றும் 600 மாடு புடி வீரர் என கோலாகலமாக நடைபெற்று வருகிறது. காலை 8 மணிக்கு துவங்கிய ஜல்லிக்கட்டுப் போட்டியின் முதல் சுற்றில் 100 காளைகள் அவிழ்த்துவிடப்பட்ட நிலையில், முதல் சுற்று முடிவில் தேனி மாவட்டம் சீலையம்பட்டி பகுதியைச் சேர்ந்த முத்துக்கிருஷ்ணன் என்பவர், அதாவது சீருடை எண்: 32 அணிந்த மாடுபிடி வீரர் 4 காளைகளை அடக்கி முன்னிலை பெற்று வருகிறார். தற்போது அமைச்சர் மூர்த்தி மாடுபுடி வீரர் முத்துக்கிருஷ்ணனுக்கு ரூ.10 ஆயிரம் ரொக்கத்தை பரிசாக வழங்கினார்.
தற்போது வரை மாடு பிடிக்கும் போது 4 மாடுபிடு வீரர்கள் மற்றும் மாட்டின் உரிமையாளர்கள் 15 பேரும் என மொத்தம் 19 நபர்கள் காயமடைந்து அதில், 5 பேர் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இதுவரை பார்வையாளர்களுக்கு யாருக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படவில்லை எனவும் கூறப்படுகிறது.