திருச்செந்தூர் கடலில் விழுந்த 4 சவரன் நகை மீட்ட சிப்பி அரிக்கும் தொழிலாளர்கள்! - etv news
Published : Sep 3, 2023, 7:12 PM IST
தூத்துக்குடி:அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாகத் திருச்செந்தூர் அமைந்துள்ளது. இக்கோயிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவது வழக்கம். இந்நிலையில் சென்னையைச் சேர்ந்த ராமசாமி (35). என்பவர் நேற்று மதியம் 1 மணி அளவில் தனது குடும்பத்துடன் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்குத் தரிசனம் செய்ய வந்துள்ளார்.
அப்போது தனது குடும்பத்துடன் கடலில் புனித நீராடிய போது, இவரது மகள் ஸ்ரீநிதிஷ்கா(11) கழுத்தில் அணிந்திருந்த 4 சவரன் தங்கச் சங்கிலியைத் தவறவிட்டார். இதுகுறித்து கோயில் பக்தர்கள் பாதுகாப்பு குழுவினரிடம் தகவல் தெரிவித்தனர். மேலும், சிவராஜா தலைமையில் அமைக்கப்பட்ட பக்தர்கள் பாதுகாப்பு குழுவினர் மற்றும் சிப்பி அரிக்கும் தொழிலாளர்கள் கடலில் தேடினர்.
இந்நிலையில், இன்று (செ.3) காலை சிப்பி அரிக்கும் தொழிலாளியான முனீஸ்வரன் கடலில் தவறி விழுந்த 4 சவரன் தங்க சங்கிலியை கண்டெடுத்தார். பின்னர் கோயில் காவல் நிலைய போலீசார் முன்னிலையில் 4 சவரன் தங்க சங்கிலி பக்தர் ராமசாமியிடம் ஒப்படைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.