மது பாட்டிலுக்குள் மட்டையான பல்லி? குமட்டிக் கொண்டு ஓடிய குடிகாரர்.. வைரல் வீடியோ! - latest news in tirupattur
Published : Nov 29, 2023, 10:32 AM IST
திருப்பத்தூர்:நாட்றம்பள்ளி அடுத்த ஏரிக்கோடி பகுதியைச் சேர்ந்தவர், பிரபாகரன். இவர் நேற்று (நவ.28) இரவு வீரகமோடு பகுதியில் உள்ள அரசுக்குச் சொந்தமான டாஸ்மாக் கடைக்குச் சென்று, ஒரு மது பாட்டிலை வாங்கியுள்ளார்.
பின்னர் அந்த பாட்டிலைத் திறந்து பார்த்தபோது பல்லி ஒன்று இறந்து கிடந்துள்ளது. இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த மதுப்பிரியர், உடனடியாக மதுபான கடைக்குச் சென்று, இந்த மது பாட்டிலில்ல் பல்லி உள்ளது, இதை மாற்றித் தரும்படி கேட்டுள்ளார்.
இதனைப் பார்த்த கடைக்காரர், “மது பாட்டிலை எதற்காக திறந்து எடுத்து வந்தீர்கள்? அப்படியே எடுத்துக் கொண்டு வர வேண்டியதுதானே” என நக்கலாக கேட்டுள்ளார். இதற்கு பதிலளித்த மதுப்பிரியர் “பாட்டிலுக்கு 5 ரூபாய் மட்டும் வாங்கத் தெரிகிறது. ஆனால் பாட்டிலில் பல்லி செத்துக் கிடப்பது தெரியவில்லையா? நான் போதையில் இருக்கிறேன். இந்த மதுவை நான் குடித்து இருந்தால் செத்துபோய் இருப்பேன்.
எனது சாவுக்கு யார் காரணம்?” என பல்வேறு கேள்விகளை அடுக்கடுக்காக எழுப்பி உள்ளார். மேலும், இவை அனைத்தையும் தனது செல்போனில் பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார். தற்போது இந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.