நான் வெஜ் சாம்பார்... சாம்பாரில் பல்லி கிடந்ததால் வாடிக்கையாளர் அதிர்ச்சி! - பார்சல் வாங்கிச் சென்ற சாம்பாரில் பல்லி
Published : Sep 13, 2023, 1:09 PM IST
கோயம்புத்தூர்:அன்னூர் பகுதியை சேர்ந்த சாகுல், அப்பகுதியில் உள்ள தனியார் உணவகத்திற்கு சென்று சாப்பிட்டு விட்டு அந்த உணவகத்தில் இருந்து அவரது நண்பர் அப்துல் என்பவருக்கும் பார்சலில் தோசை வாங்கி உள்ளார். பின்னர் அந்த தோசையை அப்துல் சாப்பிட்டு உள்ளார்.
அப்துல், முதல் தோசை சாப்பிட்டு முடித்த பின்னர், சாம்பாரை ஊற்றிய போது அதில் பல்லி இறந்த நிலையில் கிடந்துள்ளது. அதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த சாகுல் மற்றும் அப்துல், அந்த உணவகத்திற்கு சென்று சாம்பாரில் பல்லி விழுந்தது குறித்து கேட்டுள்ளனர். இவர்களின் கேள்விக்கு, ஹோட்டல் உரிமையாளர் முறையாக பதில் அளிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
இந்த நிலையில் பல்லி விழுந்த சாம்பாரை சாப்பிட்ட அப்துல் ஹலீம் மற்றும் சாகுல் இருவருக்கும் திடீரென வாந்தி, மயக்கம் மற்றும் தலைசுற்றல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அவர்கள் இருவரும் அன்னூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த அன்னூர் உணவு பாதுகாப்பு அதிகாரிகள், சம்பந்தப்பட்ட கடைக்கு நேரில் சென்று ஆய்வு நடத்தினர். அதனை அடுத்து ஒரு வார காலத்திற்கு கடை நடத்துவதற்கு தடை விதித்து அதிகாரிகள் உத்தரவிட்டனர். உணவகத்தில் பார்சல் வாங்கிய சாம்பாரில், பல்லி கிடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.