தூத்துக்குடியில் டாஸ்மாக் கடை திறக்க தாமதமானதால் மதுப்பிரியர்கள் அட்ராசிட்டி!
தூத்துக்குடி: தமிழ்நாட்டில் பொதுவாக டாஸ்மாக் கடை பிற்பகல் 12 மணிக்கு திறக்கப்படுவது வழக்கம். சாத்தான்குளம் அருகே உள்ள பேய்குளத்தில் டாஸ்மாக் இன்று மதியம் ஒரு மணியை தாண்டிய பின்னரும் திறக்காமல் இருந்துள்ளது. இதனால் டாஸ்மாக் மதுக்கடை முன்பாக மதுப்பிரியர்கள் நீண்ட நேரம் காத்திருந்தனர்.
இந்நிலையில் பேய்குளத்தில் கடை திறக்கப்படாதது குறித்து விற்பனையாளரிடம் மதுப்பிரியர்கள் கேட்டபோது அருகில் உள்ள பார் திறந்திருந்தால் கடையைத் திறக்கக்கூடாது என தூத்துக்குடி டாஸ்மாக் மேலாளர் கூறியதாகத் தெரிவித்துள்ளார்.
டாஸ்மாக் பாரை சாத்தான்குளம் அருகே உள்ள புளியங்குளத்தைச் சேர்ந்த முருகேசன் என்பவர் உரிமம் எடுத்து நடத்தி வரும் நிலையில் டாஸ்மாக் கடை திறக்கப்படாததால் மதுப்பிரியர்கள் அதிக அளவில் கூடத் தொடங்கினர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சாத்தான்குளம் போலீசார் மதுப்பிரியர்களை கலைந்து போக கூறினர். போலீசாரிடம் மதுப் பிரியர்கள் “மணி 12.57 ஆகிடுச்சு; இன்னும் கடை திறக்கல; வேணா கடைய உடைக்கட்டுமா” என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க: இரவில் நீக்கம்; காலையில் இணைப்பு.. பாஜகவில் நடப்பது என்ன?