டாஸ்மாக்கில் விலை உயர்ந்த மதுபாட்டில்கள் கொள்ளை - 2வது முறையாக மர்மக் கும்பல் கைவரிசை! - பல லட்சம் மதிப்புள்ள மதுபாட்டில்கள் கொள்ளை
நெல்லை:நெல்லை மாவட்டம், தெற்கு வள்ளியூரில் இருந்து வடலிவிளை செல்லும் சாலையில் உள்ள டாஸ்மாக் கடையில், நேற்று முன்தினம்(மே.19) இரவு வியாபாரம் முடிந்தவுடன் ஊழியர்கள் கடையை அடைத்துவிட்டு சென்றனர். டாஸ்மாக் கடையின் காவலாளியான, அதே பகுதியைச் சேர்ந்த தேவராஜ்(60) என்பவர் காவல் பணியில் இருந்தார். இந்த நிலையில் நள்ளிரவில் 3 பேர் கொண்ட கும்பல் ஒன்று, டாஸ்மாக் கடைக்கு வந்தது. அந்த கும்பல் காவலாளி தேவராஜை மிரட்டி, அவரைப் பிடித்து வாயில் மதுவை ஊற்றினர். அதன் பின்னர் டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து, உள்ளே புகுந்த அந்த கும்பல், அங்கு அடுக்கி வைக்கப்பட்டிருந்த விலை உயர்ந்த மதுபாட்டில்களை சாக்கு பையில் கட்டி எடுத்துக் கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்று விட்டனர். கொள்ளை போன மதுபாட்டில்களின் மதிப்பு பல லட்சம் ரூபாய் என்று கூறப்படுகிறது.
இந்த கும்பல் இதே மதுபானக் கடையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு, இதேபோல் காவலாளியை கத்தியைக் காட்டி மிரட்டி மதுபானங்களை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். இந்த கும்பல் இரண்டாவது முறையாக இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுதொடர்பாக பணகுடி போலீசார் வழக்குப்பதிவு செய்து, டாஸ்மாக் கடையில் கொள்ளையடித்த மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர். இதனிடையே, இந்த டாஸ்மாக் கடையில் முதல் முறை நடைபெற்ற கொள்ளைச் சம்பவம் குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.