தாம்பூலப்பையில் "சரக்கு" - வித்தியாச பரிசு கொடுத்த திருமண வீட்டார் - in Marriage Reception in Puducherry
புதுச்சேரி:புதுச்சேரியில் நடந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் திருமண தாம்பூலப்பையில் மதுபாட்டில் வழங்கப்பட்ட சம்பவம் இன்று (ஜூன் 1) அரங்கேறியுள்ளது. திருமண வரவேற்பிற்கு வரும் உறவினர்கள் மற்றும் விருந்தாளிகளுக்கு த உணவு அருந்தி செல்லும்போது, தாம்பூலம் கொடுப்பது வழக்கமாக இருந்து வருகிறது. அந்த தாம்பூலப்பையில் சாத்துக்குடி, மாம்பழம், லட்டு, தேங்காய் போட்டு கொடுப்பார்கள். ஆனால், இங்கு ஒரு திருமண வீட்டில் இந்த பழங்களுடன் மதுப்பிரியர்களை குஷிப்படுத்தும் விதமாக, மதுபாட்டில்களை தாம்பூலப்பையில் வைத்து கொடுத்துள்ளனர்.
சென்னையை சேர்ந்த நிர்மல் - புதுச்சேரி வாணரப்பேட்டையை சேர்ந்த ஆரதி என்ற மணமகளுக்கும் திருமண வரவேற்பு நிகழ்ச்சி புதுச்சேரி நகர் பகுதியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சியில், சென்னை மற்றும் புதுச்சேரியை சேர்ந்த மணமக்களின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
திருமண வரவேற்பில் கலந்து கொண்ட உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மகிழ்ச்சியடையும் வகையில் மணமகள் வீட்டார் வழங்கிய தாம்பூலப்பையில் தேங்காய் ,பழம் வெத்தலை பாக்குடன் குவாட்டர் சரக்கு பாட்டிலையும் சேர்த்துக் கொடுத்தனர். இது திருமணத்திற்கு வந்த விருந்தாளிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த செய்தி சமூக வலைதளங்களில் வேகமாக பரவிவரும் நிலையில், புதுச்சேரிக்கு செல்லும் அனைவரும் எங்காவது திருமண நிகழ்ச்சியில் தாம்பூலப்பை தர மாட்டார்களா? என இந்த சம்பவம் யோசிக்க வைத்துள்ளது.