கோவையில் கிராமத்திற்குள் புகுந்து வேட்டையாடும் சிறுத்தை.. வனத்துறை சிசிடிவி பொருத்தி கண்காணிப்பு.. - வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல்
கோயம்புத்தூர்: கணபதிபாளையம் கிராமத்தில் பொன்னுச்சாமி என்பவருக்கு சொந்தமான விவசாய தோட்டம் உள்ளது. இந்த தோட்டத்தில் இருந்த ஆடும், அருகில் உள்ள கீதாமணி என்பவரது தோட்டத்தில் இருந்த கன்றுக் குட்டியும், அடுத்தடுத்து மர்மமான முறையில் அடையாளம் தெரியாத விலங்கு தாக்கி உயிரிழந்தன.
இதனையடுத்து பொன்னுச்சாமி தோட்டத்தில் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டது. அதன் மூலம் சிறுத்தை நடமாட்டம் இருந்தது தெரியவந்தது. வனப்பகுதியில் இருந்து சுமார் 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இந்த கிராமத்தில் சிறுத்தையின் நடமாட்டம் இருப்பது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதேபோல கணபதிபாளையம் பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாகவும் கோவை வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் அப்பகுதியில் பதிவாகி இருந்த காலடி தடங்கள் மற்றும் சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அதில் சிறுத்தை நடமாட்டம் இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில் வனத்துறை சார்பில், இரு கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி தொடர்ந்து சிறுத்தையின் நடமாட்டத்தை கண்காணிக்க வனத்துறை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
இதுகுறித்து தோட்ட உரிமையாளர் பொன்னுச்சாமி கூறுகையில், ”கடந்த சில நாட்களாக ஆடு மற்றும் கன்றுக்குட்டி மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் அதனை கண்காணிக்க கண்காணிப்பு கேமரா பொருத்தியதில் சிறுத்தை போன்ற உருவம் பதிவாகியதால் இது குறித்து வனத்துறையினருக்கு தகவல் அளித்ததை தொடர்ந்து அங்கு வந்து ஆய்வு செய்து இரண்டு கண்காணிப்பு கேமராக்களை பொருத்தியுள்ளனர். மீண்டும் அந்த விலங்கின் நடமாட்டம் தென்பட்டால் கேமராவில் பதிவாகும். அதன் பின்னர் அது சிறுத்தையாக இருந்தால் கூண்டு வைத்து பிடிக்க உள்ளதாக வனத்துறையினர் தெரிவித்தனர் என்றார்.