Lawyers protest in perambalur: 'இந்தி திணிப்பு'...இந்தியில் பெயர் மாற்றப்பட்ட மசோதாவை திரும்பப் பெறுமாறு வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்!
பெரம்பலூர்: இந்திய தண்டனை சட்டம், குற்றவியல் விசாரணை முறைச்சட்டம், இந்திய சாட்சிய சட்டம், இவற்றை இந்தியில் பெயர் மாற்றம் செய்து தாக்கல் செய்திட்ட மசோதாவை திரும்பp பெறுமாறு மத்திய அரசை வலியுறுத்தி பெரம்பலூரில் வழக்கறிஞர்கள் இன்று (ஆகஸ்ட் 21) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் .
இந்நிலையில் தமிழ்நாடு - புதுச்சேரி வழக்கறிஞர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் மாரப்பன் அளித்த பேட்டியில், “பெரம்பலூர் ஒருங்கிணைந்த நீதிமன்றம் எதிரே வழக்கறிஞர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர். 100 ஆண்டுகளுக்கு மேலாக நடைமுறையில் இருந்த இந்திய தண்டனைச்சட்டம், குற்றவியல் நடைமுறைச்சட்டம், இந்திய சாட்சிகள் சட்டம் ஆகியவற்றை இந்தியில் மாற்றியுள்ளனர். வழக்கறிஞர்களாகிய எங்களாலேயே இதனை படிக்க முடியவில்லை எனும் போது இந்தியாவில் வாழக்கூடிய 130 கோடி மக்கள் என்ன செய்வார்கள் என்ற கோரிக்கை வைத்து உள்ளோம்.
மத்திய அரசு, இந்தியை வழக்கறிஞர்கள் மூலமாக நேரடியாக திணிக்கப் பார்க்கிறார்கள். ஆகஸ்ட் 31ஆம் தேதிவரை இந்த போராட்டம் நடைபெறும். அதற்கும் மத்திய அரசு செவிசாய்க்காவிட்டால் நிர்வாகிகள் ஒன்று கூடி அடுத்தகட்டப் போராட்டம் குறித்து அறிவிப்போம். அதற்கும் செவிசாய்க்காவிட்டால் சென்னையில் 50 ஆயிரம் வழக்கறிஞர்களை திரட்டி பேரணி செல்வோம். அதற்கும் செவிசாய்க்காவிட்டால் டெல்லி சென்று போராடுவோம்” என தெரிவித்தார்.
தமிழ்நாடு புதுச்சேரி வழக்கறிஞர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் மாரப்பன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் வழக்கறிஞர்கள் பலர் கலந்து கொண்டு பெயர் மாற்றப்பட்ட மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தியும் மத்திய அரசை கண்டித்தும் கோஷங்களை எழுப்பினர்.