Tirupathur district: ஆர்ஓசி தீர்மானத்தை திரும்பப் பெறக்கோரி வழக்கறிஞர்கள் போராட்டம்! - சென்னை உயர் நீதிமன்ற பதிவுத்துறை
திருப்பத்தூர்: ஆர்ஓசி தீர்மானத்தை திரும்ப பெறக்கோரி ஆம்பூரில் வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டனர். மகாத்மா காந்தி மற்றும் திருவள்ளுவரின் சிலைகளை நீதிமன்றங்களில் வைக்கவும், சட்டமேதை அம்பேத்கரின் உருவப்படங்கள் மற்றும் சிலைகளை நீதிமன்ற வளாகங்களில் வைக்கக்கூடாது எனவும் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாவட்ட நீதிமன்றங்களுக்கு சென்னை உயர் நீதிமன்ற பதிவுத்துறை அறிவுறுத்தியது.
இந்த நிலையில் திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆம்பூர், வாணியம்பாடி ஆகியப் பகுதிகளில் உள்ள நீதிமன்ற வழக்கறிஞர்கள் உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஆர்ஓசி (பதிவுத்துறை) தீர்மானத்தை திரும்பப் பெற கோரி நீதிமன்ற புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆம்பூர் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் பணியாற்றும் வழக்கறிஞர்கள் நீதிமன்ற வளாகம் முன்பு இந்திய அரசியலைப்பு சட்டத்தை இயற்றிய டாக்டர் அம்பேத்கர் புகைப்படத்தை நீதிமன்றத்தில் வைக்கக்கூடாது என பிறப்பிக்கப்பட்டு உள்ள ஆர்ஓசி தீர்மானத்தை திரும்ப பெறக் கோரி வாயில் கருப்பு துணியைக் கட்டிக்கொண்டு உயர் நீதிமன்ற நீதிபதிகளுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பி நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.