ஒகேனக்கலில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்
மே தினத்தை முன்னிட்டு, 3 நாட்கள் தொடர் விடுமுறை என்பதாலும், பள்ளியின் கோடை விடுமுறை என்பதாலும் தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல் சுற்றுலாத் தலத்திற்கு இன்று (ஏப்ரல் 30) தமிழ்நாட்டின் பிற மாவட்டங்கள் மட்டுமல்லாது அண்டை மாநிலங்களான கர்நாடகா, ஆந்திரா மற்றும் கேரளா உள்ளிட்ட பிற மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குடும்பத்தோடு குவிந்தனா்.
இவ்வாறு ஒகேனக்கல் காவிரி நீர்வீழ்ச்சிக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகள் ஆயில் மசாஜ் செய்தும், நீர் வீழ்ச்சிகளில் குளித்தும், பரிசல் பயணம் மேற்கொண்டும் மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர். முன்னதாக, ஒகேனக்கல் காவிரி ஆற்றுக்கு நீர்வரத்து நேற்று 300 கன அடி ஆக இருந்த நிலையில், இன்று காலை நிலவரப்படி நீர்வரத்து ஆயிரம் கன அடியாக உயர்ந்துள்ளது.
இதன் காரணமாக சுற்றுலாப் பயணிகள் குடும்பத்தோடு பரிசல் சவாரி மேற்கொண்டு காவிரியின் இயற்கை அழகை ரசித்து வருகின்றனர். மேலும், சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகளின் வருகை காரணமாக சிறு வியாபாரிகள், மசாஜ் தொழிலாளர்கள் மற்றும் மீன் சமையல் செய்பவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.