Exclusive - நோயாளிகளுக்கு மருந்துகள் வழங்கும் பல்நோக்கு பணியாளர்!
சேலம்மாவட்டம், மகுடஞ்சாவடியில் உள்ள மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியருக்கு பதிலாக பல்நோக்கு மருத்துவப் பெண் பணியாளர் ஒருவர் நோயாளிகளுக்கு மருந்துகள் வழங்கும் அதிர்ச்சி வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மகுடஞ்சாவடி பகுதியில் உள்ள இந்த ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு நடுவனேரி, கூடலூர், சந்தைபேட்டை, அழகானூர் மற்றும்
அதன் சுற்று வட்டாரப் பகுதியில் இருந்து நாளொன்றுக்கு 200க்கும் மேற்பட்ட நோயாளிகள் வந்து செல்கின்றனர்.
இந்நிலையில் புற நோயாளிகள் மருத்துவரை சந்தித்து விட்டு நோய்க்கான மருந்துகளை அருகில் உள்ள மருந்தகத்தில் வாங்குவது வழக்கம். அவ்வாறு மருத்துவர்கள் பரிந்துரைக்கும் மருந்துகளை செவிலியர் மட்டுமே வழங்க வேண்டும். ஆனால், இந்த மருத்துவமனையில் பல்நோக்கு மருத்துவப் பணியாளர் நோயாளிகளுக்கு மருந்துகளை வழங்கியுள்ளார்.
இது குறித்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இச்சம்பவம் குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், “குறிப்பிட்ட சில நாள்களில் இந்தப் பணியாளர் நோயாளிகளுக்கு மருந்துகளை வழங்கி வருகிறார். அனைத்து மருந்துகளும் ஒரே நிறத்தில் இருப்பதால் அவர் மருந்துகளை மாற்றி தந்தால் நோயாளிகள் கடுமையாகப் பாதிக்கப்படுவார்கள்.
மருத்துவப் பணியாளர் அல்லாமல் துறைக்கு தொடர்பு இல்லாத ஒருவர் மருந்து வழங்குவதை அதிகாரிகள் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கின்றனர். மக்களின் உயிரில் விளையாடும் இந்த மருத்துவப் பணியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுபோன்று வேறு மருத்துவமனைகளில் நடக்கிறதா என்பது குறித்து மருத்துவ உயர் அதிகாரிகள் ஆய்வு நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்” என ஊர் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க:அரசு வேலை கிடைத்த பிறகு மனைவி, குழந்தையை விரட்டிய நபர்.. பீகாரில் நிகழ்ந்த சம்பவம்!