"கச்சத்தீவை தாரை வார்த்தது காங்கிரஸ் தான்" - மத்திய அமைச்சர் எல்.முருகன் பேட்டி!
சென்னை:ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தில் நடைபெற்ற மீனவர் நல மாநாடு மற்றும் மீனவர்களுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கட்சத்தீவு தாரை வார்க்கப்பட்டது குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் பேசினார்.
அப்போது அவர், "கச்சத்தீவு தாரை வார்க்கப்பட்டது திமுக ஆட்சியில் தான் என வரலாறு தெரியாமல் மத்திய அரசு பேசுவதாகவும், கச்சத்தீவு ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்ய உரிய தூதரக நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ளாமல் போனால், நாடளுமன்ற தேர்தலுக்கு பின் அமைய இருக்கும் புதிய அரசு (திமுக) இதனை நிறைவேற்றும்" என தெரிவித்தார்.
இந்நிலையில், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் நேற்று (ஆகஸ்ட். 18) சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். வரலாறு தெரியாமல் கச்சத்தீவு தாரை வார்க்கப்பட்டதாக முதலமைச்சர் கூறியது தொடர்பான கேள்விக்கு பதிலளித்து பேசிய அவர், தமிழர்களின் நலனைப் பற்றி யோசிக்காமல் கச்சத்தீவை தாரை வார்த்தது இந்திரா காந்தி அரசு தான் என்றார்.
இந்திரா காந்தி ஆட்சியில் தான் கச்சத்தீவு தாரைவார்க்கப்பட்டது என்றும், இது நம் அனைவருக்கும் தெரியும் என்றார். தமிழக முதலமைச்சர் கச்சத்தீவு விவகாரம் ஆகட்டும், மற்ற விஷயங்களாக இருக்கட்டும், தமிழர்களின் நலன் பற்றி சிந்தித்து செயல்பட வேண்டும் என்று கூறினார். அப்போதைய இந்திரா காந்தி தலைமையிலான காங்கிரஸ் அரசு தமிழகத்தின் நலனையும், தமிழர்களின் நலனையும் யோசிக்காமல் கச்சத்தீவை தாரை வார்த்தது" என்று தெரிவித்தார்.