'தாலே ரங்கா, செல்லடி மயிலே ஓ..' தண்டு மாரியம்மன் கோயிலில் 35 ராகங்களில் பாடி Vibe செய்த ஆண்கள்! - Kummi Pattu sing by Several Men
ஈரோடு: ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் வடக்குப்பேட்டை தண்டுமாரியம்மன் கோயில் விழா கடந்த 19ம் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. இதனைத்தொடர்ந்து, கோயில் முன்பாக ஆலமரத்திலான திருக்கம்பம் நடப்பட்டு தொடர்ந்து இரவு நேரங்களில் இளைஞர்கள் 'கம்பம் ஆடும்' ஆட்டம் ஆடி வருகின்றனர். இந்த நிலையில், இதன் ஒருபகுதியாக, நேற்று (ஏப்.25) கோயிலில் அம்மன் புகழ் பாடும் பாரம்பரிய கும்மி ஆட்டம் நடைபெற்றது.
இதில் ஆர்வத்துடன் கலந்து கொண்ட ஏராளமான இளைஞர்கள், முதியோர், சிறுவர்கள் என அனைத்து தரப்பினரும் காலில் சலங்கை கட்டிக்கொண்டு கும்மியாட்டம் ஆடினார். இந்த கும்மியாட்டத்தின்போது, 35 ராகங்களில் அம்மனின் புகழைப் பாடிக் கொண்டே பாரம்பரிய கும்மியாட்டம் ஆடினர்.
முதலில் தண்டுமாரியம்மன் புகழ் பாடும் கும்மி, வள்ளியை கவர்வதற்கு முருகன் பாடும் கும்மி, வைகுந்த கும்மி மற்றும் அரிச்சந்திரன் கும்மி என ஒவ்வொரு பாட்டுக்கும் மாறுபட்ட நடனம் ஆடி அசத்தினர்.
இந்த பாரம்பரிய கும்மி பாடலை மூத்த கலைஞர் எஸ்.பி.சந்திரன் பாட, அதனை கோரஷாக ரம்மியமாக பாடியது அனைவரின் கவனத்தை ஈர்த்தது. இந்த பாரம்பரிய கும்மி பாடல், பெண்களையும் தாளம்போட வைத்தது என்றால் அது மிகை ஆகாது.