திருப்பூரில் 66வது பவளக்கொடி கும்மி நடனம்.. 300 பெண்கள் கும்மி ஆடி அசத்தல்! - Kummi dance performed by 300 women
Published : Oct 30, 2023, 2:32 PM IST
திருப்பூர்:போயம்பாளையத்தில் நடைபெற்ற 66வது பவளக்கொடி கும்மி ஆட்ட அரங்கேற்றத்தில் பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் உள்ளிட்ட 300க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, ஒரே வண்ண ஆடை அணிந்து கும்மி நடமாடி அசத்தினர்.
திருப்பூர், கோவை, ஈரோடு மாவட்டங்களில் பாரம்பரிய கும்மி ஆட்டம் எழுச்சி பெற்று வருகிறது. கோயில் விழாக்கள், முக்கிய நிகழ்ச்சிகள் உள்பட பல்வேறு விழாக்களில் இடம்பெறும் கும்மி ஆட்டமானது, திருப்பூர் பகுதி பொதுமக்களிடம் மிகுந்த ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.
அந்த வகையில் திருப்பூர் மாவட்டம், போயம்பாளையம் பகுதியில் பவளக்கொடி கும்மி குழுவின் 66 வது அரங்கேற்ற விழா நடைபெற்றது. இதில் கும்மி ஆசிரியர் விஸ்வநாதன் தலைமையில், பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் உள்ளிட்ட 300க்கும் மேற்பட்டோர் பங்கேற்று கும்மி பாடல்களுக்கு, கும்மி ஆட்டம் ஆடி அசத்தினார்கள்.
தொடர்ந்து, 3 மணி நேரம் நடைபெற்ற கும்மி ஆட்ட நிகழ்ச்சியில், ஒரே வண்ண ஆடை அணிந்து, 35 வகையான ஆட்ட நுணுக்கங்களில் பெண்கள் கும்மி ஆடினார்கள். மிக நேர்த்தியாக நடைபெற்ற இந்த கும்மி ஆட்ட நிகழ்ச்சியை பொதுமக்கள் திரண்டு ரசித்தனர்.
இந்நிலையில், கும்மி ஆசிரியர் விஸ்வநாதன் செய்தியாளர்களிடம் பேசியதாவது, “திருப்பூரில் கும்மி ஆட்டம் புத்துணர்வுடன் வளர்ந்து வருகிறது. பாரம்பரிய கும்மி ஆட்டத்தை பெண்கள், ஆண்கள் என அனைத்து தரப்பினரும் ஆர்வமுடன் பங்கேற்று ஆடுகின்றனர். அதனைத்தொடர்ந்து, கும்மி நடனம் ஆடிய ஷர்மி ஶ்ரீ கூறியதாவது, ”கும்மி ஆட்டம் ஆடுவதன் மூலம் மனமும், உடலும் புத்துணர்வு பெறுவதாகவும், பெண்கள் ஏராளமாக கலந்து கொண்டு கும்மி ஆட ஆர்வம் காட்டுகின்றனர். இளம் பெண்கள் பாரம்பரிய கும்மி ஆட்டத்தை மீட்டெடுத்து வருகின்றனர்” என்று கூறினார்.