Magna Elephant: மக்னா யானையைக் கட்டுப்படுத்த களமிறக்கப்பட்ட சின்னத்தம்பி யானை! - ஆனைமலை வனப்பகுதி
ஆனைமலை:தர்மபுரியில் இருந்து பிடிக்கப்பட்ட மக்னா யானை, ஆனைமலைப் புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட வனப்பகுதியில் விடப்பட்டது. தற்போது இந்த மக்னா யானை சரளப்பதி அருகே கடந்த சில மாதங்களாக முகாமிட்டு, விளைநிலங்களை சேதப்படுத்தியும், பொதுமக்களை அச்சுறுத்தியும் வருகிறது.
இதனை அடுத்து வனத்துறையினர் கண்காணிப்புப் பணிகளைத் தீவிரப்படுத்தினர். ஆனால், வனத்துறையினரின் பிடியில் சிக்காத இந்த மக்னா யானை, அண்மையில் வனத்துறையினரின் வாகனத்தையும் சேதப்படுத்தியது. இதனை அடுத்து மக்னா யானையை கட்டுக்குள் விரட்ட சரளப்பதி பகுதியில் இரண்டு கும்கி யானைகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.
தொடர்ந்து மக்னா யானையைப் பிடிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து, பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். இதனை அடுத்து தற்போது வனத்துறையினர் மக்னா யானையைப் பிடிக்க கும்கி யானை உதவியுடன் ஆயத்தமாகி உள்ளனர். இதன் ஒரு பகுதியாக கும்கி யானைகளான ராஜவர்தன், கபில்தேவ் ஆகிய யானைகள் சரளபதி பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
மேலும் முரட்டுத்தனமான மக்னா யானைகளைக் கட்டுப்படுத்தும் கைதேர்ந்த ஸ்பெஷலிஸ்ட் ஆக கருதப்படும் சின்னத்தம்பி என்கிற கும்கி யானையும், தற்போது வனத்துறையினருடன் மக்னா யானையைப் பிடிக்கும் பணியில் களமிறக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து இன்னும் ஓரிரு நாட்களில் மக்னா யானை வனத்துறையினரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்படும் என்பது இப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.