மாசி மகம்: ஆயிரக்கணக்கானோர் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம்! - to prayers to their ancestors
தஞ்சாவூர்: மாசி மகத்தை முன்னிட்டு தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு காவிரி ஆற்றில் ஏராளமானவர்கள் புனித நீராடி மறைந்த தங்கள் முன்னோர்களுக்கு திதி மற்றும் தர்ப்பணம் கொடுத்தனர். மறைந்த தங்கள் முன்னோர்களுக்கு மாதம்தோறும் வரும் அமாவாசை மற்றும் வருடாந்திர திதி கொடுக்க தவறியவர்கள் மாசி மகம் அன்று தஞ்சை மாவட்டம் திருவையாறு காவிரி ஆற்றில் புனித நீராடி தர்ப்பனம் செய்தால் புண்ணியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
அதன்படி, மாசி மகமான இன்று (மார்ச்.6) திருவையாறு பகுதியில் உள்ள காவிரி கரையாற்றில் குவிந்த ஆயிரக்கணக்கானோர் புஷ்ய மண்டப படித்துறையில் புனித நீராடினர். பின்னர், அவர்கள் அனைவரும் மறைந்த தங்களின் முன்னோர்களை நினைத்து பச்சரிசி, காய்கறிகள், கீரை ஆகியவற்றை தானமாக வழங்கி, எள் பச்சரியில் பிண்டம் பிடித்து காவிரி ஆற்றில் கரைத்து தர்ப்பணம் கொடுத்து முன்னோர்களை வழிபட்டனர்.
அதன் பின்னர், திருவையாறு அறம் வளர்த்த நாயகி உடனாகிய ஐயாறப்பர் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தனர். இதை போல், கும்பகோணத்தில் மகாமக குளத்தில் அதிகாலை முதலே பொது மக்கள் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். மேலும், மகாமக குளத்தை ஒட்டியுள்ள காசி விஸ்வநாதர் கோயில், அபிமுகேஸ்வரர் கோயில் ஆகியவற்றில் பொதுமக்கள் சாமி தரிசனம் செய்தனர்.