கும்பகோணம் பள்ளி தீ விபத்து: 19ஆம் ஆண்டு நினைவு நாள் அனுசரிப்பு! - கும்பகோணம் பள்ளி தீ விபத்து
உலகையே உலுக்கிய கும்பகோணம் பள்ளி தீ விபத்தில் கடந்த 2004ஆம் ஆண்டு ஜூலை 16ஆம் நாள் காசிராமன் தெருவில் உள்ள பள்ளியில் பயின்ற 94 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர். இதில் 18 குழந்தைகள் படுகாயமுற்றார்கள். இதன் 19ம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது.
இதனையொட்டி, சம்பவம் நடந்த பள்ளி முன்பு குழந்தைகளை இழந்த பெற்றோர், சமூக ஆர்வலர்கள் என பல தரப்பினர் மெழுகுவர்த்தி ஏற்றி வைத்து குழந்தைகளுக்கு பிரியமான இனிப்பு வகைகள், பழங்கள் வைத்து கண்ணீர் மல்க அவர்களது திருவுருவப் படத்திற்கு உதிரி மலர்கள் தூவி அஞ்சலி செலுத்தினர்.
இதில், அரசு தலைமை கொறடா கோவி செழியன், மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் செ.இராமலிங்கம், கும்பகோணம் எம்எல்ஏ சாக்கோட்டை க.அன்பழகன், மாநகராட்சி துணை மேயர் சு.ப.தமிழழகன், மாநகராட்சி உறுப்பினர்கள், திமுக கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் என ஏராளமானோர் ஊர்வலமாக வந்து குழந்தைகளின் திருவுருவப் படத்தின் முன்பு மலர் வளையம் வைத்தும், மலர் மாலைகள் அணிவித்தும், உதிரி மலர்கள் தூவியும் கண்ணீர் மல்க தொடர்ந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
மேலும், எம்எல்ஏ சாக்கோட்டை க.அன்பழகன், பள்ளி முன்பு அஞ்சலி செலுத்த திரண்டு வந்திருந்த அனைவருக்கும் பிஸ்கட் பாக்கெட்டுகள், குளிர்பானம் மற்றும் தண்ணீர் பாட்டில் அடங்கிய தொகுப்பு பைகளை வழங்கினார்.