பூலோக வைகுண்டத்தில் தைப்பொங்கல் தேரோட்ட திருவிழா கோலாகலம்! பக்தர்கள் சாமி தரிசனம்!
Published : Jan 15, 2024, 2:05 PM IST
தஞ்சாவூர்:பூலோக வைகுண்டம் எனப் போற்றப்படும் சாரங்கபாணி சுவாமி திருக்கோயிலில் ஆண்டு தோறும் ஸங்க்ரமண பிரமோற்சவம் (தை பொங்கல் தேரோட்ட திருவிழா) கொடியேற்றத்துடன் தொடங்கி, பத்து நாட்களுக்கு நடைபெறுவது வழக்கம். அதே போல இந்த ஆண்டும், கடந்த 7ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, நாள்தோறும் வெள்ளியில் செய்யப்பட்ட இந்திர விமானம், சேஷ வாகனம், கருட வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் பெருமாள் திருவீதியுலா வந்தார்.
அந்த வகையில், விழாவின் 9வது நாளான இன்று (ஜன.15) உற்சவர் ஸ்ரீதேவி, பூமிதேவி தாயாருடன், சாரங்கபாணி சுவாமி விசேஷ பட்டு வஸ்திரம், நறுமண மாலைகள் சூடி, தேருக்கு எழுந்தருள, திருத்தேரோட்டமும் சிறப்பாக நடைபெற்றது. இதனைக் கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் சாக்கோட்டை க.அன்பழகன், மாநகர துணை மேயர் உள்ளிட்ட அதிகாரிகள் பலர் இணைந்து வடம் பிடித்து, தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர்.
இந்த தேரோட்டத்தில், நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து இழுத்தும், தேரில் உலா வந்த பெருமாள் மற்றும் தாயார்களைத் தரிசனம் செய்து மகிழ்ந்தனர். இதனைத் தொடர்ந்து, நாளை 16ஆம் தேதி, விழாவின் 10ஆம் நாளாக, பெருமாள் திருவடி திருமஞ்சனம் த்வாதஸ திருவாராதனம் கண்டருளளுடன், இந்த ஆண்டிற்கான தைப் பொங்கல் தேரோட்டத் திருவிழா இனிதே நிறைவு பெறுகிறது.