கோவையில் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டம்.. கிருஷ்ணர், ராதை வேடமணிந்து சிலம்பம் சுற்றிய குழந்தைகள்! - Children dressed as Krishna and Radha
Published : Sep 6, 2023, 2:24 PM IST
கோயம்புத்தூர்:நாடு முழுவதும் இன்றுகிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டு வருகிறது. கிருஷ்ண ஜெயந்தி நாளில் ஆண் குழந்தைகளுக்கு கிருஷ்ணர் வேடமும், பெண் குழந்தைகளுக்கு ராதை வேடமும் அணிவித்து விழாவை கொண்டாடுவது வழக்கம். மேலும், நாட்டில் உள்ள அனைத்து கிருஷ்ணர் கோயில்களிலும் சிறப்பு வழிபாடுகள் மற்றும் பூஜைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அந்த வகையில், கோவை சின்னவேடம்பட்டி பகுதியில் உள்ள முல்லை தற்காப்பு கலை பயிற்சி கழகத்தின் சார்பில் கிருஷ்ண ஜெயந்தியை கொண்டாடும் விதமாக, அங்கு பயிற்சி பெறும் குழந்தைகளுக்கு கிருஷ்ணர் மற்றும் ராதை வேடம் அணிவிக்கப்பட்டு சிலம்ப பயிற்சி அளிக்கப்பட்டது. இந்த புதுவித நிகழ்வை, முல்லை தற்காப்பு கலை பயிற்சி கழகத்தின் பயிற்சியாளர் பிரகாஷ் நடத்தினார்.
கிருஷ்ண ஜெயந்தி நாளில் குழந்தைகளுக்கு கிருஷ்ணர் மற்றும் ராதை வேடம் அணிவித்து, ஆடல், பாடல், நாடகங்கள் என நிகழ்ச்சிகள் நடத்தப்படும் நிலையில் இவரது இந்த புதுவித முயற்சி பார்வையாளர் அனைவரையும் வெகுவாக கவர்ந்தது. இந்த நிகழ்ச்சியில் குழந்தைகளின் பெற்றோர்கள் கலந்து கொண்டு குழந்தைகளை உற்சாகப்படுத்தினர்.