பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு தீபாவளிப் பரிசுகளை வழங்கிய கோவில்பட்டி கண் தானம் இயக்கம்!
Published : Nov 8, 2023, 9:23 AM IST
தூத்துக்குடி: கோவில்பட்டியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் கோவில்பட்டி கண் தானம் இயக்கத் தலைவர் விநாயகா ரமேஷ் தலைமையில் 160 பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு நல உதவிகள் வழங்கப்பட்டன.
பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளும் தீபாவளியை எந்த ஒரு பேதமும் இன்றி கொண்டாடும் வகையில் சர்க்கரை, அரிசி, கோதுமை மாவு, துவரம் பருப்பு, பாசிப்பருப்பு, உளுந்தம் பருப்பு, பொரிகடலை (பொட்டுக்கடலை), மிளகாய் பொடி, சாம்பார் பொடி, மஞ்சள் பொடி, வத்தல், சலவை சோப்பு, மிளகு, டீ தூள், புத்தாடைகள் மற்றும் இனிப்பு, கார வகைகள், குளிர்காலத்தில் அவர்களுக்கு உதவிகரமாக இருப்பதற்காக படுக்கை விரிப்புகள் வழங்கப்பட்டன.
கன்னியாகுமரி, தென்காசி, விருதுநகர், திருச்சி உள்ளிட்ட வெளி மாவட்டங்களைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகளும் இந்நிகழ்வில் பங்கேற்று தங்களுக்கான தீபாவளிப் பரிசை வாங்கிச் சென்றனர். இந்நிகழ்ச்சியில் கண்தான இயக்க உறுப்பினர்கள் சுந்தர்ராஜன், செந்தில்குமார், ஹரிபாலன், பிரசன்னா, சந்திரசேகர், நாடார் நடுநிலைப்பள்ளி செயலாளர் கண்ணன் மற்றும் அப்துல் கலாம் ரத்ததான கழகத் தலைவர் ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.