அவகோடா பழத்தின் விலை திடீர் சரிவு..! கொடைக்கானல் விவசாயிகள் வேதனை..! - ஈடிவி பாரத் தமிழ்நாடு
Published : Oct 26, 2023, 5:56 PM IST
திண்டுக்கல்: கொடைக்கானல் மலைப் பகுதியில் வாழும் மக்கள் விவசாயத்தையே பிரதான தொழிலாகச் செய்துவருகின்றனர். பல்வேறு விதமான காய்கறிகள் மற்றும் பழங்களை விவசாயம் செய்து வருகின்றனர். குறிப்பாக வில்பட்டி, பள்ளங்கி, புலியூர், பண்ணைக்காடு, தாண்டிக்குடி ஆகிய மலைக்கிராமங்களில் அவகோடா பழங்கள் அதிக அளவில் விவசாயம் செய்யப்படுகின்றன.
அப்பகுதிகளில் விளையும் அவகோடா பழங்கள் தமிழகத்தில் விற்பனை செய்யப்படுவது மட்டுமின்றி, வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. தற்போது ஏற்பட்டுள்ள, பருவநிலை மாற்றத்தாலும், அவகோடா மரங்களில் தாக்கப்படும் நோயினாலும் அவகோடா விவசாயம் பெருமளவு பாதிப்படைந்துள்ளதாகவும், இதை நம்பி உள்ள விவசாயிகள் பெருமளவு நஷ்டம் அடைந்து வருவதாகவும் கூறப்படுகின்றன.
இந்நிலையில் தற்போது அறுவடை செய்யப்பட்டுள்ள அவகோடா பழங்கள், 1 கிலோவிற்கு ரூபாய் 150 முதல் ரூபாய் 200 வரை மட்டுமே விற்பனை செய்யப்பட்டு வருவதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். மேலும், அவகோடா விவசாயத்தை ஊக்குவிக்கத் தோட்டக்கலைத் துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கொடைக்கானல் மலைவாழ் விவசாயிகள் மற்றும் வியாபாரிகளின் கோரிக்கை முன் வைத்துள்ளனர்.