கெங்கை அம்மன் கோயில் தேர்த் திருவிழா: உப்பு, மிளகை வீசி பக்தர்கள் நேர்த்திக்கடன்!
குடியாத்தம்: வேலூர் மாவட்டம், குடியாத்தம் கெங்கை அம்மன் கோயிலில் ஆண்டுதோறும் சிரசு திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தாண்டுக்கான விழா கடந்த 30ம் தேதி காப்புக் கட்டுதலுடன் தொடங்கியது. இந்நிலையில் சிரசு திருவிழா நாளை (மே 15) கொண்டாடப்பட உள்ள நிலையில், இன்று (மே 14) தேர்த் திருவிழா நடைபெற்றது.
அலங்கரிக்கப்பட்ட தேரில் கெங்கையம்மன் எழுந்தருளினார். கோபாலபுரம் கோயில் அருகில் இருந்து பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்தனர். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். முக்கிய வீதிகள் வழியாக தேர் சென்ற போது உப்பு மற்றும் மிளகு ஆகியவற்றை வீசி, பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். மேலும் வழிநெடுக ஆடு, கோழிகளை பலியிட்டு வேண்டுதலை நிறைவேற்றினர்.
நாளை நடைபெறும் சிரசு விழாவில் தமிழ்நாடு மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களைச் சேர்ந்த 5 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பக்தர்கள் சிரமமின்றி அம்மனை தரிசித்துச் செல்ல கோயில் நிர்வாகம் சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சுமார் 1,500 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கண்காணிப்பு பணிகளுக்காக நகர் முழுவதும் கூடுதலாக சிசிடிவி கேமராக்களைப் பொருத்தவும் திட்டமிடப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.