தமிழ்நாடு

tamil nadu

கெங்கையம்மன் கோயில் திருவிழா

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 14, 2023, 2:32 PM IST

ETV Bharat / videos

இரு தரப்பு பிரச்சினையால் பாதியில் நின்ற கோயில் திருவிழா - ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்ற கிராம மக்கள்!

வேலூர்:பேரணாம்பட்டு அடுத்த பாலூர் கிராமத்தில் உள்ள கெங்கையம்மன் கோயில் திருவிழா ஆண்டுதோறும் வைகாசி மாதம் நடைபெறும். இந்த ஊர் நாட்டாமையாக மனோகரன் என்பவர் இருந்து வந்தார். இந்த நிலையில் அவருடைய மகன் செந்தில் என்பவர் கோயிலின் வரவு செலவு கணக்குகளை பார்த்து வந்ததாகவும், ஊர் பொதுமக்களுக்கு முறையாக கணக்கு காட்டவில்லை என்றும் கூறப்படுகிறது.

இந்நிலையில் ஊர் நாட்டாமை மனோகரன் மற்றும் அவர் மகன் செந்தில் இருவரையும் மாற்றி புதிய நாட்டாமைகளை தேர்வு செய்ய வேண்டும் என ஊர் பொதுமக்கள் முடிவு செய்தனர். இதனைத் தொடர்ந்து கிராம மக்கள் குடியாத்தம் கோட்டாட்சியரிடம் புகார் அளித்திருந்தனர். இது தொடர்பாக குடியாத்தம் கோட்டாட்சியர் வெங்கட்ராமன், இரு தரப்பினர்களையும் அழைத்து  விசாரணை மேற்கொண்டார்.

பின்னர் குடியாத்தம் கோட்டாட்சியர் உத்தரவின் படி புதிய நாட்டாமையாக வெங்கடேசன் என்பவரை கிராம மக்கள் தேர்வு செய்தனர். இதனைத் தொடர்ந்து வைகாசி மாதம் நடத்த வேண்டிய கங்கை அம்மன் கோயில் திருவிழா, மூன்று மாதங்கள் கழித்து, புதியதாக தேர்வு செய்யப்பட்ட ஊர் நாட்டாமை வெங்கடேசன் தலைமையில், வெகு விமர்சையாக நடைபெற்று வந்தது. 

இந்நிலையில் முன்னாள் நாட்டாமை மனோகரன் மற்றும் அவருடைய மகன் செந்தில் தரப்பினருக்கும், புதியதாக தேர்வு செய்யப்பட்ட வெங்கடேசன் தரப்பினருக்கும் பிரச்சினை ஏற்பட்டது. துணைக் காவல் கண்காணிப்பாளர் சரவணன் மற்றும் வருவாய் துறையினர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். மேலும் இரு தரப்பினர் இடையே பேச்சுவார்த்தை நடத்தினர்.

பேச்சுவார்த்தையின் போது இரு தரப்பினருக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு சமரசம் ஏற்படவில்லை. ஆகம விதிப்படி நடைபெறவிருந்த கெங்கையம்மன் திருக்கல்யாணம் திருவிழா பாதியில் நிறுத்தப்பட்டது. இதனால் பொதுமக்கள் கொண்டு வந்த சீர்வரிசையுடன், கெங்கையம்மனை தரிசனம் செய்யாமல் திரும்பிச் சென்றனர். ஆண்டுக்கு ஒரு முறை நடைபெற இருக்கும் கெங்கையம்மன் கோயில் திருவிழா, பாதியில் நிறுத்தப்பட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

ABOUT THE AUTHOR

...view details