காட்பாடி ரயில் நிலையத்தில் கைவிடப்பட்ட பராமரிப்பு பணிகள்.. என்எல்சி கழிவறையின் அவலநிலையை விளக்கும் வீடியோ!
Published : Oct 12, 2023, 4:53 PM IST
|Updated : Oct 12, 2023, 7:09 PM IST
வேலூர்:காட்பாடி சந்திப்பு ரயில் நிலையத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் ரயில்கள் மூலம், நாள்தோறும் பல்லாயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். இந்நிலையில் சில ஆண்டுகளுக்கு முன்பு காட்பாடி ரயில் நிலையம் வெளிப்புறத்தில், என்.எல்.சி இந்தியா லிமிடெட் (NLC Indian Limited) சார்பில், பொதுமக்களின் பயன்பாட்டிற்காக கழிவறை அமைக்கப்பட்டு இருந்தது.
சில மாதங்கள் மட்டுமே பயன்பாட்டில் இருந்த கழிவறை, காலப்போக்கில் பராமரிப்பு பணிகளை எதுவும் மேற்கொள்ளப்படாமல் அப்படியே விடப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும், ரயில்வே நிர்வாகமும் எந்த வித நடவடிக்கை எடுக்கவில்லை என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். பராமரிப்பு பணிகள் எதுவும் இல்லாமல் இருக்கும் கழிவறைகளில் இருந்து கழிவு நீர் வெளியேறி, அப்பகுதியில் துர்நாற்றம் வீசி வருகிறது.
மேலும், அப்பகுதியில் நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. எனவே ரயில்வே நிர்வாகம் பராமரிப்பு இல்லாமல் உள்ள கழிவறையை சீரமைத்து, பயணிகள் மற்றும் பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.