கோவையின் அடையாளங்கள் சீர்வரிசை.. களைகட்டிய காதணி விழா! - namma kovai
கோயம்புத்தூர்: சங்கனூரைச் சேர்ந்தவர் மகேஷ்வரன். இவரது மகன் புகழேந்தி. புகழேந்தியின் காதணி விழா அதே பகுதியில் நடைபெற்றது. இந்த நிலையில், காதணி விழாவிற்கு கோவையின் அடையாளச் சின்னங்களான ரயில் நிலையம், மணிக்கூண்டு, கோனியம்மன் கோயில், மருதமலை கோயில், நம்ம கோவை உள்ளிட்ட 8 அடையாள மாதிரிகளை சீர்வரிசையாக கையில் ஏந்தி, சாரட்டு வண்டியில் அழைத்து வந்தனர்.
பொதுவாக நற்காரியங்களுக்கு சீர்வரிசை என்றால் பழங்கள், இனிப்புகள், அணிகலன்களை எடுத்து வருவர். அதில் சிலர் 101 தட்டுகள், 201 தட்டுகளில் எல்லாம் சீர்வரிசை எடுத்து வந்து அசரச் செய்வர். இந்த நிலையில், கோவை மாநகரில் நடைபெற்ற காதணி சீர்வரிசை அணிவகுப்பில் கோவையை பெருமைப்படுத்தும் விதமாக கோவையின் அடையாளச் சின்னங்களின் மாதிரிகளை சீர்வரிசை அணிவகுப்புடன் எடுத்து வந்தது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
மேலும், கோவையை பெருமைப்படுத்தும் விதமாக இந்த அடையாளச் சின்னங்களை சீர் வரிசையுடன் எடுத்து வந்ததாகவும், நமது மாவட்ட அடையாளச் சின்னங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த செண்டை மேளம் முழங்க பேரணியாக நடந்து வந்ததாகவும் குடும்பத்தினர் தெரிவித்தனர்.