கார்த்திகை சோமவாரத்தை முன்னிட்டு தஞ்சை பெரிய கோயிலில் 1008 சங்குகளால் சிறப்பு அபிஷேகம்! - சங்கு அபிஷேகம்
Published : Nov 21, 2023, 8:06 AM IST
தஞ்சாவூர்: தஞ்சை பெரிய கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதம் திங்கள்கிழமை, சோமவாரமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், நேற்று (நவ.20) கார்த்திகை மாத முதல் சோமவாரத்தை (Somavaram) முன்னிட்டு, தஞ்சை பெரிய கோயிலில் வீற்றிருக்கும் பெருவுடையாருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது.
முன்னதாக பெருவுடையார் சன்னதி முன்பு 1,008 வலம்புரி சங்குகளில் புனித நீர் நிரப்பப்பட்டு, மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, சிவலிங்க வடிவில் வலம்புரி சங்குகள் அடுக்கி வைக்கப்பட்டன. பின்னர் மங்கள வாத்தியங்கள் முழங்க, ஓதுவார்களால் தேவாரத் திருமுறைகள் பாடி, சிவாச்சாரியார்கள் கடத்திற்கு சிறப்பு பூஜைகள் மற்றும் யாக குண்டத்தில் சிறப்பு யாகம் நடத்தப்பட்டது.
அதனைத் தொடர்ந்து 1,008 வலம்புரி சங்குகளில் நிரப்பப்பட்ட புனித நீரால் அபிஷேகம் நடைபெற்றது. பின்னர், ஸ்ரீ பெருவுடையாருக்கு திரவியப்பொடி, பால், தயிர், சந்தனம், மஞ்சள், அன்னம், விபூதி உள்ளிட்ட அபிஷேகப் பொருட்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்து, மகாதீபாராதனை காட்டப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
மேலும், இந்த ஆண்டு கார்த்திகை மாத சோமவாரம், வருகிற 27ஆம் தேதி இரண்டாம் சோமவாரமும், டிசம்பர் 4ஆம் தேதி மூன்றாம் சோமவாரமும், மற்றும் டிச.11ஆம் தேதி கடைசி சோமவாரமும் நடைபெறவுள்ளது.