அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை மாத பிரதோஷ சிறப்பு அபிஷேகம்!
Published : Dec 11, 2023, 7:40 AM IST
திருவண்ணாமலை:கார்த்திகை மாத பிரதோஷ தினத்தையொட்டி திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் உள்ள பெரிய நந்திக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நேற்று (டிச.10) மாலை வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும், நினைத்தாலே முக்தி தரும் ஸ்தலமாக விளங்கக்கூடிய திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில், ஆயிரங்கால் மண்டபம் அருகே உள்ள பெரிய நந்திக்கு கார்த்திகை மாத பிரதோஷம் நடைபெற்றது. அமாவாசை மற்றும் பௌர்ணமி வரும் இரண்டு தினங்களுக்கும் முன்பு மகா நந்திக்கு பிரதோஷம் நடைபெறுவது வழக்கம்.
அந்த வகையில், சிறப்பு பெற்ற கார்த்திகை மாத பிரதோஷ தினமான நேற்று அண்ணாமலையார் கோயிலில் உள்ள பெரிய நந்திக்கு அரிசி மாவு, மஞ்சள் தூள், அபிஷேகத்தூள், பஞ்சாமிர்தம், தயிர், தேன், பன்னீர், இளநீர், சந்தனம், விபூதி மற்றும் பால் ஆகியவற்றைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
அதனைத்தொடர்ந்து, பெரிய நந்தி பகவானுக்கு அருகம்புல், வில்வ இலை, சாமந்திப் பூ, மல்லி, கனகாம்பரம் ஆகிய வண்ண மலர்களால் மாலை அணிவித்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, பஞ்சமுக தீபாராதனையும் நடைபெற்றது. பிரதோஷ தினத்தின் பொழுது நந்தி பகவானை வழிபட்டால் நினைத்த அனைத்து காரியங்களும் நிறைவேறும், திருமணம் ஆகாதவர்களுக்கு திருமண பாக்கியம் கிடைக்கும், குழந்தைப்பேறு இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிட்டும் என்பது ஐதீகம்.
அண்ணாமலையார் கோயில் கார்த்திகை மாத பிரதோஷத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அண்ணாமலையாருக்கு அரோகரா கோஷம் எழுப்பி சாமி தரிசனம் செய்தனர்.