தஞ்சை பெரிய கோயிலில் கார்த்திகை தீப நிகழ்ச்சி: 15 அடி உயர சொக்கப்பனையை கொளுத்தி பக்தர்கள் வழிபாடு! - Chokkapanai
Published : Nov 27, 2023, 2:29 PM IST
தஞ்சாவூர்: கார்த்திகை தீபத்தை முன்னிட்டு உலக புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோயிலில் 15 அடி உயரத்திற்கு அமைக்கப்பட்டிருந்த சொக்கப்பனை கொளுத்தப்பட்டது. ஏராளமான பக்தர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
தமிழ் மாதங்களில் கார்த்திகை மாதத்தில் வரும் முக்கிய நிகழ்வான திருக்கார்த்திகை திருவிழா, நேற்று (நவ.26) வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. அந்த வகையில் தமிழகம் முழுவதும் உள்ள சிவன், முருகன் விநாயகர் ஆலயங்களில் சொக்கப்பனை ஏற்றும் நிகழ்வு நடைபெற்றது.
அதன்படி உலக புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோயில் முன்பு 15 அடி உயரத்திற்கு பனை ஓலைகளால் சொக்கப்பனை செய்யப்பட்டிருந்தது. மேலும் கோயிலில் இருந்து பெருவுடையார் பெரியநாயகி அம்மன் சிறப்பு அலங்காரத்துடன் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதையடுத்து அம்மனுக்கு தீபாராதனை காட்டப்பட்டது.
இதன் பின்னர், தஞ்சை பெரிய கோயில் முன்பு அமைக்கப்பட்டிருந்த 15 அடி சொக்கப்பனைக்கு அபிஷேகம் நடத்தப்பட்டு கொளுத்தப்பட்டது. இந்த சொக்கப்பனை கொழுத்தும் நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.