தனியாய் தத்தளித்த குட்டி யானை மீண்டும் கூட்டத்தோடு சேர்ப்பு.. நெகிழவைக்கும் சம்பவத்தின் வீடியோ! - தமிழக கர்நாடக எல்லை
சேலம்:மேட்டூர் அருகே வனப்பகுதியில் இருந்து வழி தவறி வந்த குட்டி யானையை, கர்நாடக வனத்துறையினர் மீட்டு தாய் யானையுடன் சேர்த்தனர். மேட்டூர் அருகே தமிழக - கர்நாடக எல்லையை ஒட்டி உள்ளது பாலாறு வனப்பகுதி. இங்கு யானை, கரடி, மான், உள்ளிட்ட ஏராளமான காட்டு விலங்குகள் உள்ளது. தற்போது கோடை காலம் தொடங்கியுள்ளதால், வனப்பகுதியில் கடும் வறட்சி ஏற்பட்டுள்ளது.
இதனால், பாலாறு வனப்பகுதியில் இருந்து காட்டு விலங்குகள் தண்ணீர் தேடி காவிரி ஆற்றுக்கு படையெடுக்கின்றன. இந்நிலையில், வனப்பகுதியில் இருந்து நேற்று தண்ணீர் தேடி யானைகள் கூட்டமாக காவிரி ஆற்றுக்கு வந்தது. யானைக் கூட்டங்கள் தண்ணீர் அருந்திவிட்டு, காவிரியை கடந்து மறு கரையில் உள்ள வனப்பகுதிக்கு சென்றன.
அப்போது, குட்டி யானை ஒன்று தண்ணீரில் நீந்த முடியாமல் கரையிலேயே நின்று விட்டது. இதனை கண்ட, கர்நாடக வனத்துறையினர் குட்டி யானையை மீட்டு தாயுடன் சேர்க்கும் முயற்சியில் ஈடுபட்டனர். எனவே, வனத்துறையினர் குட்டி யானையை வாகனம் மூலம் பாலாறு வனப்பகுதிக்கு கொண்டு சென்றனர்.
அங்கு, தாய் யானை கூட்டத்துடன் நின்று கொண்டிருந்தது. இதையடுத்து, வாகனத்தில் இருந்த குட்டி யானையை வனத்துறையினர் கீழே இறக்கிவிட்டனர். பின்னர், வனத்துறையினர் அப்பகுதியில் இருந்து உடனடியாக சென்ற நிலையில், தாய் யானை குட்டி யானையை மெதுவாக அழைத்துச் சென்று அடர்ந்த வனப்பகுதிக்குள் மறைந்தது.
இதையும் படிங்க:சென்னை, காஞ்சிபுரத்தில் 6 இடங்களில் நிரந்தர வெள்ள தடுப்பு - அமைச்சர் துரைமுருகன் அறிவிப்பு